தொல்லியல்

தொல்லியல் செயல்பாடுகள்


1 # அறம் கிளை தொல்லியல் குழுவைச் சேர்ந்த அக்கு ஹீலர்கள் கமல், சண்முகலட்சுமி இருவரும் இணைந்து மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் கல்வெட்டுகளை இன்று பயிற்சிக்காக ஆய்வு செய்தனர். அப்போது இதுவரை படியெடுக்கப்படாத புதிய கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

முனைவர் வேதாசலம் மற்றும் ஆய்வாளர் செந்தீ நடராசன் ஆகியோரின் உதவியோடு கல்வெட்டு வாசித்து பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் கோவிலுக்கு அளித்த நிலக்கொடை பற்றிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.


2 #  தேனி தொல்லியல் கையேட்டினைத் தொகுக்கும் பணியை அ.உமர் பாரூக் மற்றும் குழுவினர் துவங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஐம்பதற்கும் மேற்பட்ட தொல்லியல் தளங்களை அடையாளம் கண்டு, புதிய விவரங்களோடு தொகுப்பதற்கான தொடர் பணிகளை அறம் தொல்லியல் ஆய்வு மையம் துவங்கியுள்ளது. ஆண்டிபட்டி புள்ளிமான் கோம்பை நடுகற்கள், உத்தமபாளையம் சமணர் மலை கல்வெட்டு, சின்னமனூர் செப்பேடுகள், மயிலாடும் பாறை பாறை ஓவியங்கள், ஜெயமங்கலம் பெருமாள் கோயில் கல்வெட்டுகள், கம்பம் வேலப்பர் கோயில் கல்வெட்டு, ஜம்புலிபுத்தூர் பெருமாள் கோயில் கல்வெட்டுகள். . என தொகுப்பு பணி தொடர்கிறது.

 
3 # வீராபாண்டியில் சதிக்கல் கண்டுபிடிப்பு. கணவன் இறந்தவுடன் மனைவியையும் உடன் கட்டை ஏற வைக்கும் சதியில் இறந்த மனைவியின் நினைவாக வைக்கப்படும் சதிக்கல் (சதிமாதா வழிபாடு) அது. கல்லின் மேற்புறம் சந்திரரும் - சூரியரும் இருந்தால் அது சொர்க்கத்தைக் குறிக்கும். சில கற்களில் கூடுதலாக ஏதேனும் ஒரு கடவுளின் சிற்பமும் இணைந்திருக்கும். கணவனோடு உடன் கட்டை ஏறும் பெண் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை சிற்பங்கள் விளக்குகின்றன. ஒரு வீரனின் மனைவி, அவன் உடலோடு சேர்த்து எரிக்கப்பட்டதன் நினைவாக நிறுவப்பட்ட கல் அது.


4 # கம்பம் அருகிலுள்ள புதுப்பட்டியில் வீரக்கல் மற்றும் சதிக்கல் கிடைத்துள்ளது. கம்பம் சாலையில் அமைந்துள்ள சாலையோர வழிபாட்டிடத்தில் இவ்விரு கற்களும் இருந்தன.